கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுகான் நகரில் அனைத்து நோயாளிகளும் குணம் அடைந்த நிலையில் புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் அனைத்து நோயாளிகளும் குணம் அடைந்தனர் – புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை
பெய்ஜிங்:
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உருவாகி உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது.
சீனாவில் பலி எண்ணிக்கையில் 84 சதவீதம் வுகான் நகரத்தில் தான் ஏற்பட்டது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறுகிய நாட்களில் தற்காலிக ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்பட்டன. நாடு முழுவதும் இருந்து மருத்துவக் குழுக்கள் வுகான் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொரோனா சிறப்பு மருத்துவமனை – கோப்புப்படம்
இந்த நிலையில் வுகான் நகரில் சிகிச்சையில் இருந்த அனைவரும் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கு புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் செய்தி தொடர்பாளர் லிபெங்கு கூறியதாவது:-
கொரோனா வைரஸ் உருவான வுகான் நகரில் நேற்று புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் வுகான் நகரில் கொரோனா புதிய தொற்று பூஜியமாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்புக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வுகான் நகரம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நகரமாக மாறி உள்ளது. சீனாவில் இதுவரை 4 ஆயிரத்து 632 பேர் பலியாகி உள்ளனர். இதில் வுகானில் மட்டும் 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்துள்ளனர்.