இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. நாட்டில் வைரஸ் தொற்றால் 31,787 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 770 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளனர்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், நம் வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றி உள்ளது. உணவு, உடை, உறைவிடம் இவை நாட்டுக்கு நாடு மாறுபட்டு இருந்த நிலையில், இந்த கொரோனா அனைவரையும் ஒரேபோல வாழ பழக்கிவிட்டது. விதவிதமான உணவுகளை உண்டு வந்தவர்களை இன்று நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆகாரத்தை தேட வைத்துவிட்டது. விலையுயர்ந்த வண்ணமயமான ஆடைகளை அணிந்து உலா வந்தவர்களைகூட முகத்தில் முக கவசம் அணிந்து கொண்டு, உடல் முழுவதையும் மறைக்கும் உடையை அணியச் செய்துவிட்டது. உல்லாச பறவைகளாக சுற்றித்திரிந்தவர்களை உறைவிடமான வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடங்கி இருக்க வைத்துவிட்டது.
பூமியில் வாழும் அனைவரும் இந்த கொரோனா எப்போது ஒழியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கியதுடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது. இந்தியாவிலும் இந்த கொடூர கொரோனா 31,787 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 1,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய நாள் 30 ஆயிரத்தை நெருங்கி இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 31 ஆயிரத்தை தாண்டியது. வைரஸ் பாதிப்பால் புதிதாக 71 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,008 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 22,982 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரே நாளில் மட்டும் 770 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,797 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 31 ஆயிரம் பேரில், 9,318 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு இந்த வைரஸ் 400 பேரின் உயிரையும் பறித்துவிட்டது. குஜராத்தில் 3,774 பேரையும், டெல்லியில் 3,314 பேரையும், ராஜஸ்தானில் 2,364 பேரையும், மத்திய பிரதேசத்தில் 2,561 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்து உள்ளது. உத்தரபிரதேசத்தில் 2,115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முறையே 1,332, 1,012 பேரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கி றது. கேரளாவில் இந்த எண்ணிக்கை 500-ஐ நெருங்கி விட்டது.