ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் வந்தாலும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரங்களில் மாற்றம் வராது – தமிழக அரசு விளக்கம்

Spread the love

மத்திய ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டுவரப்பட்டதால், இந்த ஆணையத்தின் அதிகாரங்களில் மாற்றம் வராது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக பொதுப்பணித்துறையின் விளக்கம் அளிக்கிறது. அதாவது, மத்திய அரசு கடந்த 24-ந்தேதியன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை தொடர்பாக இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 2018-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதியன்று அதை மத்திய அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட்டது.

அதில் இந்த ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர்மன்றம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல சக்தி துறை அமைச்சகம் உருவாக்கம்

இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது. மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதத்தில், நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல சக்தி துறை அமைச்சகத்தை உருவாக்கியது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொறுப்புகள் தொடர்பாக உள்ள விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் ஜல சக்தி துறை அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இந்த அமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பணிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில், கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும். அதன்படி, ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய பணிகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.

இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page