ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர தூதராக திருமூர்த்தி நியமனம்

Spread the love

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர தூதராக திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது வெளியுறவுத்துறையில் பணியாற்றி வருபவருமான டி.எஸ். திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வரும் திருமூர்த்தி, அனுபவமிக்க தூதர் சையத் அக்பருதீனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

“நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் அடுத்த தூதர் / நிரந்தர பிரதிநிதியாக திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்பருதீன் 2016 ஜனவரியில் ஐ.நாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார், அவர் ஓய்வுபெற உள்ளார்.

கடந்த 1962-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சென்னையில் பிறந்தவரான திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று, சட்டம் பயின்றார். அதன்பின் ஐஏஎஸ் தேர்வில் 1985-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இந்திய தூதராகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

மேலும் வங்காள தேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பாலஸ்தீனம், மலேசியா, ஜகார்தாவில் இ்ந்தியத்தூதராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளரான திருமூர்த்தி, கிஸ்ஸிங் தி ஹெவன் மானசரோவர் யாத்ரா, கிளைவ் அவென்யு, சென்னை வாசி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

திரு மூர்த்தியின் மனைவி கவுரி திருமூர்த்தி, முன்னாள் டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மகள் ஆவார். திருமூர்த்தி கவுரி தம்பதிக்கு மகன்,மகள் உள்ளனர். இவர்களின் மகள் பவானி திருமூர்த்தியும் இந்திய டென்னி்ஸ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page