ஊரடங்கு அமலுக்கு மத்தியிலும் மாநிலங்கள் இடையே தடையற்ற லாரி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலங்கள் இடையே தடையற்ற லாரி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சரக்குகளை எடுத்துக்கொண்டு செல்வதற்கும் சரி, சரக்குகளை இறக்கி விட்டு திருப்பி செல்வதற்கும் சரி லாரிகளுக்கு தனியாக ‘பாஸ்’ எதுவும் தேவையில்லை, ஓட்டுனரின் உரிமமே போதுமானது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநில எல்லைகளிலும் லாரிகளை அனுமதிப்பதில் தடைகள் விதிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இந்த அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதுபற்றி உள்துறை செயலாளர் அஜய் பால்லா கூறுகையில், “எல்லா லாரிகளையும், சரக்கு வாகனங்களையும் மாநிலங்கள் இடையே சென்று வர அனுமதிக்க வேண்டும். 2 டிரைவர்கள், ஒரு உதவியாளர் என வாகனங்களில் 3 பேர் இருக்கலாம். டிரைவர்கள் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
தடையற்ற லாரி, சரக்கு வாகன போக்குவரத்தை உறுதி செய்து மாவட்ட நிர்வாகங்களுக்கு தேவையான அறிவுரையை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.