கொரோனா வைரசுக்கு எதிரான போரில் எல்லா வகையிலும் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக வெற்றியை நோக்கி முன்னேறுவதாக மத்திய மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற போர் நிலவரம் குறித்து சமூக நலச்சங்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் டெல்லியில் நிதி ஆயோக் அமைப்பு நேற்று இணைய வழி கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நடத்தி வருகிற போரில், நாம் வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாடு எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கிறது. வரவிருக்கும் வாரங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் உறுதியான வெற்றியை பெற முடியும்.
அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.), தொழில்நுட்பத்துறை ஆகியவை, கொரோனா வைரசின் மரபணுப்படுத்தலை 1000 இடங்களில் செய்து வருகின்றன. நம்மிடம் 6 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 4 கணிசமான முன்னேற்ற நிலையில் உள்ளன.
நமது நாட்டில் ஒவ்வொரு நாளும், 1½ லட்சம் சுய பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு பொருளை கண்டறியும் சோதனை கருவிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி, உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 11 முதல் 20 நாட்களில் இரட்டிப்பு ஆகிறது. கர்நாடகம், லடாக், அரியானா, உத்தரகாண்ட், கேரளா ஆகியவற்றில் 20 முதல் 40 நாட்களில் இரட்டிப்பு ஆகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் இறப்பு விகிதம், 3.2 சதவீதமாக இருக்கிறது. இவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள், 35 சதவீதம் பேர் பெண்கள். வயது அடிப்படையில் பிரித்து பார்த்தால், 45 வயதுக்குட்பட்டோரின் இறப்பு 14 சதவீதமாகவும், 45-60 வயது பிரிவினரின் இறப்பு 34.8 சதவீதமாகவும், 60 வயதுக்கு அதிகமானோரின் இறப்பு 51.2 சதவீதமாகவும் இருக்கிறது.
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவோரின் அளவு கடந்த 14 நாட்களில் 13.06 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 8 ஆயிரத்து 373 பேர் குணம் அடைந்துள்ளனர். இது 25.19 சதவீதம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.