14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்: வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு

Spread the love

தமிழகத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது உள்பட புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்துக்குள் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மற்ற மாநிலத்துக்கு செல்வதற்கு அவசர பயண பாஸ்களை சென்னை மாநகர ஆணையரும், மாவட்ட கலெக்டர்களும் வழங்குகின்றனர்.

அதுபோல, தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட தொழில் மையங்கள் மூலம் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. பாஸ் வழங்கும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த https://tne-pass.tne-ga.org என்ற இ-பாஸ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலமாகவும் இதை இயக்கலாம்.

தனிப்பட்ட நபர்களோ, அமைப்புகளோ இதில் விண்ணப்பித்து 3 விதமான பாஸ்களை பெற முடியும். மாவட்டங்களுக்குள் பயணிப்பதற்கான பாஸ்களை மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட தொழில் மையம் (சென்னையில் மாநகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர்) மூலம் பெறலாம். இந்த பாஸ், பக்கத்து மாவட்டத்தில் வழங்கும் பாசின் நிறத்துக்கு மாறுபட்டிருக்கும்.

தமிழகத்துக்குள் வேறு மாவட்டத்துக்கு செல்வோருக்கான பாஸ்கள், சென்னையில் உள்ள மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்படுகிறது. என்றாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த பாஸ்களை, தொழிற்சாலைகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட தொழில் மையம் (சென்னையில் மாநகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர்) மூலம் பெறலாம்.

தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமானால், மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் பாஸ் வழங்கப்படுகிறது. இது முற்றிலும் வேறு நிறத்தில் இருக்கும். தமிழ்நாட்டுக்குள் வர வேண்டுமானால், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த பாஸ்களை பெற்றிருக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தனிநபர் ஒவ்வொருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவோரைத் தவிர மற்றவர்களை 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்க கலெக்டர்கள் வழிமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

மாநிலத்துக்குள் பயணிப்பவர்கள், வீட்டுக்கு திரும்பி வந்ததும் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்.

இ-பாஸ்கள் மாற்றத்தக்கதல்ல. மாற்றினால் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

அரசின் அனுமதி உத்தரவு வந்தவுடன், எலக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற சுயதொழில் புரிவோருக்கு பாஸ்கள் வழங்கப்படும். கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களின் ஊழியர்களின் போக்குவரத்துக்கான பாஸ்களை பெறலாம்.

பெரிய மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மாவட்ட தொழில் மையம், தொழில் மற்றும் வர்த்தக இணை இயக்குனர் (சென்னை) ஆகியோர் பாஸ்களை வழங்குவார்கள். இவை தவிர கட்டுமானம் போன்றவற்றுக்கான பாஸ்களை கலெக்டர் அதிகாரம் அளிக்கும் அலுவலர்கள் (சென்னையில் மாநகராட்சி ஆணையர்) வழங்குவார்.

செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. மூலம் விண்ணப்பித்து, பாஸ் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் கியூ.ஆர்.கோட் இருக்கும். இதுதொடர்பாக சென்னை இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையை 18004251333 என்ற இலவச எண்ணை காலை 8 முதல் இரவு 8 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

இன்டர்நெட் வசதி இல்லாதோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க, தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையத்தை இயங்க செய்ய வேண்டும்.

பொது நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்த நிறுவனத்திலும் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக் கூடாது.

பொது மற்றும் தனியார் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page