தமிழகத்தில் இ-பாஸ் பெற புதிய நடைமுறைகள் அறிவிப்பு

Spread the love

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு (இ-பாஸ்) பெறுவதற்கு புதிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு (இ-பாஸ்) பெறுவதற்கு புதிய நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தனிநபர் மட்டும் அல்லாது தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பல்வேறு துறைகளின் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறுவதற்கு tnepass.tnega.org என்ற இணை தளத்தில் மொபைல் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்.

ஊரடங்கு உத்தரவு – கோப்புப்படம்

மாவட்டங்களுக்குள் செல்வதற்கான அனுமதிச்சீட்டு மாவட்ட கலெக்டர், மாவட்ட தொழில் மையம் அல்லது சென்னை மாநகர கமி‌ஷனர் அல்லது அதிகாரிகளால் வழங்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களை அடையாளப்படுத்தும் வகையில் வேறுபட்ட வண்ணத்தில் இந்த பாஸ் இருக்க வேண்டும்.

மாவட்டங்களை கடந்து செல்வதற்கான அனுமதி சீட்டு மாநில ‘இ-பாஸ்’ கட்டுபாட்டு அறை மூலம் வழங்கப்படும். அதேசமயம் தொழில் தொடர்பான தேவையென்றால் வழக்கம் போல காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர், சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையம் அல்லது ஆணையரிடம் இருந்து பெறலாம்.

வெளிமாநிலங்களுக்கான அனுமதிச்சீட்டு முழுமையாக மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மட்டுமே வழங்கப்படும். மற்ற 2 வகை பாஸ்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் தனிதனி வண்ணங்களில் வழங்கப்படும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த அனுமதிச்சீட்டை பெறலாம்.

மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அனுமதி சீட்டு தொழில்துறை, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலை நிறுவனங்கள் துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

இந்த அனுமதி சீட்டின் நகல் சம்மந்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனித்து வைக்கப்படுவார்கள்.

திருமணம், மரணம், மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனிநபர் பாஸ் வழங்கப்படும். நெருங்கிய உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் பாசை பெறுவதற்கு திருமண அழைப்பிதழை இணைக்க வேண்டும். மரணம் குறித்து மருத்துவர் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்று இணைக்கப்பட வேண்டும்.

மருத்துவ காரணங்களுக்காக என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றிதழை இணைக்க வேண்டும்.

தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற தனி நபர்கள் தனிப்பட்ட முறையில் சேவை வழங்குபவர்கள் அரசு உத்தரவு வந்த பிறகு பணிகளுக்கு செல்ல பாஸ் வழங்கப்படும்.

கடைகள், நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்ய இந்த புதிய நடைமுறையில் விண்ணப்பிக்கலாம்.

இதன்படி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாய பணிகள் செய்பவர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற் சாலைகளில் பணிபுரிபவர்கள், அரிசி, ஆயில், பருப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியும். விவசாயம் சம்மந்தமான கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் இந்த நடைமுறையில் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல கட்டுமான நிறுவனங்கள், செங்கல் சூளை நிறுவனங்கள், இரும்பு, ஜல்லி, கான்கிரீட் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவையும் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்ய புதிய நடைமுறையின்படி விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. பதிவு சான்றிதழ், உத்யோக் ஆதார் போன்றவற்றின் சான்றிதழை இணைக்க வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் செயல்பாடு குறித்த நிரந்தர குறிப்பையும் இணைக்க வேண்டும். அவ்வப்போது அரசு அறிவித்து வரும்போது நிறுவனங்கள் ஊழியர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மாவட்ட தொழில் துறை பொது மேலாளர், தொழில் மற்றும் வர்த்தக துறை இணை இயக்குனர் இதற்கான அனுமதி சீட்டை வழங்குவார்கள்.

பாஸ் பெறுவதற்கு எஸ்.எம்.எஸ். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வழங்கி உறுதிப்படுத்தப்படும். அதுபோல பாஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். இதன்மூலம் பாசை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையை 1800 4251333 என்ற எண்ணை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த நாளும் தொடர்பு கொள்ளலாம். இன்டர்நெட் சேவை இல்லாதவர்கள் இ-சேவை மையத்துக்கு சென்று இலவசமாக சேவை பெறலாம்.

அதிகாரிகளால் ஏற்கனவே வழங்கப்பட்ட பாஸ் அதற்குரிய காலம் வரை பயன்பாட்டில் இருக்கும். அதுபற்றி பிறகு அறிவிக்கப்படும். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளுக்கு மாற வேண்டும். புதிய நடைமுறை தொடங்கும் நேரம் மற்றும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page