கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கிலியட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தி சிகிச்சை அளிப்பதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
வாஷிங்டன்:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக அமெரிக்காவின் கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 பகுதிகளில் 1,063 பேருக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்ததில், நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளைக் காட்டிலும் இந்த மருந்து விரைவாக நோயாளிகளை குணப்படுத்துவதாகவும் கூறியது.
மற்ற மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்ததாக தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனமும் (என்ஐஏஐடி) தெரிவித்தது.
நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி
இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு கிலியட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதன்மூலம் அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த மருந்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்புடன் நடந்த சந்திப்பின் போது, கிலியட் தலைமை நிர்வாகி டேனியல் ஓ’டே, இந்த நடவடிக்கையை ஒரு முக்கியமான முதல் படி என கூறினார். அத்துடன், நோயாளிகளுக்கு உதவுவதற்காக கிலியட் நிறுவனம் 15 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை நன்கொடையாக அளிப்பதாகக் கூறினார்.
இந்த நன்கொடை குறைந்தது 1 லட்சத்து 40 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.