திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு பயந்து வீடுகளில் இருப்பவர்களை விட வெயிலுக்கு பயந்து வீடுகளில் இருப்பவர்கள் தான் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மக்களை மிரட்டும் கத்தரி வெயில் – கொரோனா
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்து இன்று விதிகள் தளர்த்தப்பட்டு பிறகு அதிக அளவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் காலை 11 மணிக்கு மேல் குறைவாகவே இருந்தன.
இதற்கு ஊரடங்கு உத்தரவு வைரஸ் பீதி காரணங்கள் கூறப்பட்டாலும், திருச்சி மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் கடும் வெயில் காரணம் என கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 104 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. வெளியில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரிக்கிறது.
ஏற்கனவே வைரஸ் பிடியில் மக்கள் தவித்து வரும் நிலையில் கடும் வெயிலும் சுட வைப்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைத்துள்ளது. இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் கத்தரி வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
எனவே மே மாதம் முழுவதும் வெயிலுக்கு பயந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுதல் வெகுவாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசை தடுப்பதில் அரசின் கட்டுப்பாடுகளுக்கு வெயிலும் துணை நிற்கிறது. கொரோனா வைரசுக்கு பயந்து வீடுகளில் இருப்பவர்களை விட வெயிலுக்கு பயந்து வீடுகளில் இருப்பவர்கள் தான் அதிகம் என அதிகாரிகள் கூறினர்.