கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடைபெற்று வரும் ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்,
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு 1,583 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 15,526 பேரும், குஜராத்தில் 5,804 பேரும், டெல்லியில் 5,104 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை மே 17ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “மாநில தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான ரங்காரெட்டி மற்றும் மல்காஜிகிரி-மேட்சல் மாவட்டங்களில் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் போது யாராவது வெளியே காணப்பட்டால், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.