மே 6ம் தேதி முதல் மதுபானக் கடைகள் உட்பட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மும்பையில் இன்று மட்டும் மேலும் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், 26 பேர் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9758 ஆக உள்ளது. அதேபோல், மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 387 -ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் ( மே 6ம் தேதி) மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தினால் கடைகளை மூடும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 15,526 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மராட்டியத்தில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 617 ஆக உயர்ந்துள்ளது.