புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று(மே 12) முதல் மீண்டும் துவங்குகிறது. டில்லி – சென்னை உட்பட, 15 பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டி நடைமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மார்ச், 25 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. வரும், 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ‘இன்று முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் இயக்கப்படும்; ரயில் போக்குவரத்து படிப்படியாக துவக்கப்படும்’ என, ரயில்வே அறிவித்துள்ளது.
டில்லியில் இருந்து, திப்ருகர், அகர்த்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்புர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மாட்கோன், மும்பை, ஆமதாபாத் மற்றும் ஜம்மு தாவிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும். இவை, இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு துவங்கியது.
நேற்று சிறப்பு ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு துவங்கிய முதல் 3 மணி நேரத்திலேயே, 54,000 பயணிகளுக்கு சுமார் 30,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரூ.10 கோடிக்கு டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.
இந்நிலையில், ரயில் பயண வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை…
* சுகாதாரத்துறை ஆலோசனைகளை பின்பற்றி ரயில்களை இயக்க வேண்டும்
* ரயில் நேரம், முன்பதிவு வழிமுறைகள், பயணிகள் விவரங்களை வெளியிட வேண்டும்
* முன்பதிவு செய்வோர், உரிய அடையாள சான்றிதழுடன் வர வேண்டும். ரயில் புறப்படும் மற்றும் இறங்கும் இடத்தில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
* பயணியர் கட்டாயம், முக கவசம் அணிய வேண்டும்.
* ஒவ்வொரு ரயில் பயணிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
* ரயில் பயணத்துக்கு முன் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதித்த பின் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
* முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால் 50% கட்டண பிடித்தம் செய்யப்படும்
* ரயிலில் வழங்கப்படும் உணவுக்கான தொகை டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படாது
* ஏசி பெட்டிகளில் பயணிப்போர்களுக்கு கம்பளி, படுக்கை விரிப்பு வழங்கப்படாது
* பயணிகள் பயணத்தின் போது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.