புதுடில்லி : ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதுடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரிக்கப்படும்,” என, பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு, வரும், 17க்குப் பின்னும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொருளாதாரத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று கலந்துரையாடினார். இதில், பிரதமர் பேசியது குறித்து, ஏற்கனவே விரிவான தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிக்கையை, பிரதமர் அலுவலகம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.
அதில், பிரதமர் பேசியதாக கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். இதை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது நிலவும் பிரச்னையின் உண்மை தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும்.
கொரோனா பிரச்னையால், தனிப்பட்ட மனிதரிலிருந்து, ஒட்டு மொத்த மனித சமுதாயமுமே ஒரு புதிய வாழ்க்கைக்கு தயாராகி வருகிறது. முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றில் சில கட்டுப்பாடுகள், இரண்டாவது ஊரடங்கிற்கு தேவைப்படவில்லை. அதேபோல், மூன்றாவது ஊரடங்கு காலத்தில் இருந்த சில நடவடிக்கைகள், அதற்குபிந்தைய காலத்துக்கு தேவைப்படாது.
பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவே, சில வழித் தடங்களில் பயணியர் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்து வழித் தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படாது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில், இனி அதிக கவனம் செலுத்தப்படும். அத்துடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரிக்கப்படும். இவ்வாறு, பிரதமர் பேசியதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் பேசியதை வைத்து பரிசீலிக்கும்போது, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு, வரும், 17ம் தேதிக்குப் பின்னும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.