அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனாவுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அந்நாட்டில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
13.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2.5 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு திரும்பி சென்றுள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என தெரிவித்து உள்ளார்.
நாங்கள் தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், பின்லாந்து மற்றும் வேறு எந்த நாடுகளையும் விட அதிகளவிலான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.
நேற்று காலை வரை 90 லட்சம் அளவுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 3 லட்சம் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
கடந்த 3 வாரங்களுக்கு முன் நாளொன்றுக்கு நாங்கள் 1.5 லட்சம் என்ற அளவில் மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வந்தோம். இது 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 3 லட்சம் என்ற அளவை அடைந்து உள்ளது. இன்னும் பெரிய அளவில் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.