மும்பை:
ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து, விரைவில் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படும் என, தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பயணம் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
விமான போக்குவரத்து நிறுவனங்கள், பயணியரின் கருத்துக்களை பெற்று, இறுதி அறிக்கை வெளியிடப்படும்.வரைவறிக்கையின் முக்கிய அம்சங்கள்: விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ள விதிமுறைப்படி, விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், விமான நிலையத்திற்கு பயணியர் வர வேண்டும்.
விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், ‘ஆரோக்கிய சேது’ செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். அடையாள அட்டையை சோதித்த பின்னரே, பயணியரை அனுமதிக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் கொரானா பாதிப்பு இருந்தது அல்லது தனிமையில் இருந்தது தொடர்பான கேள்விகள், பயணத்திற்கு முன், பயணியரிடம் வழங்கப்படும். இதற்கு, ஆரோக்கிய சேது செயலியிலேயே, பதில் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், துாய்மை பராமரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பர பலகைகளை வைக்க வேண்டும். விமான போக்குவரத்தின் துவக்க காலத்தில், பயணியர், தங்களுடன் விமானத்தில், ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. எதை எடுத்துச் செல்லலாம் என்ற விபரங்களை, பயணியருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். விமானத்தில் இரு வரிசைகளை காலியாக வைத்து, திடீரென உடல்நிலை பாதிக்கப்படும் பயணியருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.
விமான நிலையத்திற்குள் வரும் பயணியருக்கு, வெப்பமானி சோதனை செய்து, ‘சானிடைசர்’ எனப்படும் கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும். பயணிக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட, வெப்ப அளவு அதிகமாக இருந்தால், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். அவர், பயண தேதியை மாற்றித் தரலாம் அல்லது ரத்து செய்தால் அபராத கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில், ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.