நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் அந்த திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
3-வது நாளாக இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன், தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 8 திட்டங்கள் விவசாயத்துறை உட்கட்டமைப்புக்காக இருக்கும் என்றார்.
இந்நிலையில் நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்கிறேன். இது கிராமப்புற பொருளாதாரம், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறைகளுக்கு உதவும். குறிப்பாக வேளாண்மைத்துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்