ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தபால் நிலையத்தில் ‘புக்கிங்’ செய்யப்படுகிறது.
ஊரடங்கில் தளர்வு: தபால் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பணி தொடக்கம்
திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் அனைத்து போக்கு வரத்தும் முடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஊரடங்கு காரணமாக தபால் அலுவலகங்களில் பார்சல் ‘புக்கிங்’ டெலிவரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தபால் நிலையத்தில் ‘புக்கிங்’ செய்யப்படுகிறது. இதில் ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் மட்டும் அத்தியாவசிய பொருட்களுடன், அனைத்து பார்சல்களையும், சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் புக்கிங் செய்து டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புக்கிங் செய்யும் போது, ‘அத்தியாவசிய பொருள்’ என பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். கடிதங்கள், பார்சல் டெலிவரிக்கு சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. பார்சல் புக்கிங் செய்த 2 அல்லது 3 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.