2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கப்படுள்ளது.
ரோம்,
சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஐரோப்பிய நாடான இத்தாலி மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தாலிதான் முதன் முதலில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்தநிலையில் இத்தாலியில் தற்போது கொரோனா வைரசின் தீவிரம் குறைந்திருக்கிறது. இதனால் அந்த நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் சர்வதேச பயணத்தை அனுமதிக்க இத்தாலி அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதே நாளில் உள்நாட்டிலும் பயணங் கள் மேற்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு பிறகு நாட்டில் பயண தடை நீங்க உள்ளதற்கு இத்தாலி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த 4-ந்தேதி முதல் இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பூங்காக்கள், உணவு நிலையங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.