கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா வெண்டிலேட்டர் வழங்குகிறது

Spread the love

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் உதவும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஏராளமான வெண்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மிகச்சிறப்பான புரிந்து கொள்ளுதலும், நட்பும் இருக்கிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் இரு நாடுகள் இடையே நல்லதொரு ஒத்துழைப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியா மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.

உடனே அதன் மீதான ஏற்றுமதி தடையை இந்தியா விலக்கிக் கொண்டது. அமெரிக்காவுக்கு 5 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்தது.

இந்தநிலையில் தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுகிறது.

இதுகுறித்து டிரம்ப் நேற்றுமுன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு அமெரிக்கா வெண்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும். இதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் எத்தனை வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிடவில்லை.

அதைத் தொடர்ந்து அவர் வார இறுதி நாட்களை கழிப்பதற்காக கேம்ப் டேவிட் செல்வதற்காக மரைன் 1 விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் வழங்குவதை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறும்போது, “இந்தியாவுக்கு நாம் ஏராளமான வெண்டிலேட்டர்களை அனுப்புகிறோம். நான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். நாம் நிறைய வெண்டிலேட்டர்களை அவர்களுக்கு வினியோகிக்க இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

முன்னதாக காலையில் பிரதமர் மோடியையும், இந்தியாவையும் டிரம்ப் புகழ்ந்தார். அப்போது அவர், “இந்தியா மிகச்சிறப்பான நாடு. உங்களுக்கெல்லாம் தெரியும், இந்திய பிரதமர் மோடி எனது நல்ல நண்பர். நான் இந்தியாவுக்கு சமீபத்தில் குறுகிய கால பயணமாக சென்று வந்தேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றாக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதே போன்று வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லி மெக்னானியும் இந்தியாவை புகழ்ந்து பேசினார். அவர், “இந்தியாவுடனான நமது சிறந்த உறவை ஜனாதிபதி புகழ்ந்தார். இந்தியா கொஞ்ச காலமாகவே நமது சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர் களை அனுப்பி வைப்பதை அறிந்து நான் ஊக்கம் அடைகிறேன். அமெரிக்காவில் இருந்து வெண்டிலேட்டர்களை பெறும் பல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்” என கூறினார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதிலும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “அமெரிக்க வாழ் இந்தியர்கள் மாபெரும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள். தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம். நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர்” என குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டின் கடைசிக்குள் கிடைத்து விடும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தடுப்பூசி மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கு அவர் கிளோஸ்கோ ஸ்மித்க்லைன் நிறுவனத்தின் தடுப்பூசி பிரிவுகளின் முன்னாள் தலைவரை நியமித்தார்.

“கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி இருக்கிறது. நம்பிக்கைக்கு உரிய 14 தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளுடன் ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இது மிகப்பெரிய திட்டம். மிக விரைவாக நிறைவேற்றப்படுகிற திட்டமும் ஆகும். இந்த திட்டத்துக்கு ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page