சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அதிரடி

Spread the love

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டி வந்தார். ஆனால் ஹூவாய் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.

எனினும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவன பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடைபோட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.

ஹூவாய் நிறுவன விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக உரசல் நீடித்து வரும் சூழலில் தற்போது கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியதற்கு சீனாதான் காரணம் என டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் டிரம்ப், சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று கூறியதோடு, அந்த நாட்டின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்திருந்த பல நூறு கோடி டாலர் முதலீடுகளை திரும்ப பெறவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், செமிகன்டக்டர்களை (கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ‘சிப்’ தயாரிப்பதற்கான கருவி) உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான செமிகன்டக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில்தான் இருக்கின்றன. இங்கிருந்துதான் உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் செயல்படும் பல நிறுவனங்கள் சீனாவின் ஹூவாய், ஹாய்சிலிகான் நிறுவனங்களுக்கு செமிகன்டக்டர்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக சீனாவின் ராணுவம் மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சிப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

ஹூவாய் நிறுவனத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே ஹூவாய் நிறுவனத்துக்கு இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது. இதற்கு சட்டத்தின் ஓட்டைகளே காரணமாக இருந்தன. அதை சரி செய்யவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகளின்படி அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும்.

ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு தடைவிதித்தது. பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் கொண்டுவரப்பட்ட அந்த உத்தரவும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page