தமிழக அரசின் திட்டத்தை முக ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் – அமைச்சர் க.பாண்டியராஜன்

Spread the love

தமிழக அரசின் திட்டத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கொரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் சின்னஞ்சிறிய நாடுகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை

தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டும், இறந்தோர் எண்ணிக்கை மிக குறைவாக, கட்டுக்குள் இருப்பதைக் கண்டும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். பொருத்தமற்ற, அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.

மாத்திரை, மருந்துகள், மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் மக்கள் அனைவரும் பார்த்து, அரசுக்கு ஒத்துழைப்பும், பாராட்டும் வழங்கி வரும் நேரத்தில், பதவி ஆசை பிடித்து செய்வதறியாது மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகங்களை ஊரே, உலகமே எள்ளி நகையாடுகிறது.

ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அரசியல் செயல் திட்டத்தை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் மக்களின் குறைகளை போக்குவதாக, அவர்களிடம் வாங்கிய மனுக்கள் என்ற பெயரில், அவற்றை அரசிடம் கொண்டு வந்து கொடுத்திருப்பது, பேரிடர் காலத்திலும், அவர் மேற்கொண்டிருக்கும் தேர்தல் பிரசார வேலை தானே தவிர, வேறொன்றும் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குறைகளை களைய முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலம் இதுவரை 9,77,637 மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களின் அனைத்து வகையான தேவைகளையும் தீர்த்து வைத்து, பேரன்பைப் பெற்றிருக்கும் இந்த அரசின் செயல்களை மு.க.ஸ்டாலின் காப்பியடிக்க துவங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட வேலை அவருக்கு தேவையா? அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் போல அரிசி பஞ்சம், மின்வெட்டு, தண்ணீர் பஞ்சம், மக்களின் கையில் ஒரு ரூபாய்க்கும் வழியில்லாத பணத்தட்டுப்பாடு என்பன இன்றைக்கு இல்லையே என்பதுதான் மு.க.ஸ்டாலினுக்கு கவலையாக இருக்கிறது. அத்தகைய இருண்ட காலம் ஒரு போதும் இனி வராது. கொரோனா போன்ற பெருந்தொற்று உள்ள நேரத்திலும் மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஆட்சியாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page