கொல்கத்தாவில் கொரோனா பரவி வரும் நிலையில் நர்சுகள் வேலையை விட்டு விட்டு, சொந்த ஊர்களுக்கு விரைவு: பின்னணி என்ன?

Spread the love

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொல்கத்தாவில் தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் வேலையை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு விரைந்தனர். இதனால் அந்த நகரம் பதற்றத்தின் பிடியில் உள்ளது.

கொல்கத்தா,

மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி செய்யும் மேற்கு வங்காள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தன் கைவரிசையை காட்டி வருகிறது.

நேற்று முன்தின நிலவரப்படி அங்கு 2,575-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 230-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 870-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் அந்த மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் நர்சுகளாக பணியாற்றி வந்த 300-க்கும் மேற்பட்டோர் வேலையை விட்டு விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நர்சுகள் மணிப்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

கடந்த வார தொடக்கத்தில் 185 நர்சுகள் வேலையை விட்டு விட்டு தங்கள் சொந்த மாநிலமான மணிப்பூருக்கு சென்று விட்டனர். சனிக்கிழமையன்று 169 பேர் வேலையை விட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். அவர்களில் 92 பேர் மணிப்பூருக்கும், 43 பேர் திரிபுராவுகும், 32 பேர் ஒடிசாவுக்கும், 2 பேர் ஜார்கண்டுக்கும் சென்றனர்.

இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவா சின்காவுக்கு கொல்கத்தாவின் கிழக்கு இந்திய ஆஸ்பத்திரிகளின் சங்கத்தின் தலைவர் பிரதீப் லால் மேத்தா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் நர்சுகள் வேலையை விட்டு விட்டு எதற்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர் என்பதற்கான சரியான பின்னணி தெரியவில்லை; ஆனால் மணிப்பூர் மாநில அரசு தங்கள் மாநிலத்தை சேர்ந்த நர்சுகள் சொந்த ஊருக்கு திரும்பினால் லாபகரமான உதவித்தொகையை வழங்குவதாக கூறி இருப்பதாக, தற்போதும் கொல்கத்தாவில் பணியில் தொடர்கிற நர்சுகள் மூலம் தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதை மணிப்பூர் மாநில முதல்-மந்திரி நோங்தாம்பம் பிரேன் சிங் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறி இருப்பதாவது:-

அதிக உதவித்தொகை தரப்படும் என மாநில அரசு கூறவில்லை. யாரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பும்படி நாங்கள் கேட்கவில்லை. இங்குள்ள நர்சுகள் கொல்கத்தா, டெல்லி, சென்னை என பிற நகரங்களில் பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் இழப்பீடும், வெகுமதியும் அளிப்போம் என்று கூறி இருக்கிறோம். ஆனால் தாங்கள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிகளில் அவர்கள் வசதியாக உணரவில்லை என்கிறபோது, அவர்களை அங்கேயே தொடர்ந்து வேலை செய்யும்படி என்னால் கட்டாயப்படுத்த முடியாது. இது அவர்கள் விருப்பம். அவர்கள் திரும்பி வருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம் என்று அவர் அதில் கூறி உள்ளார்.

இதற்கிடையே மணிப்பூர் திரும்பி விட்ட ஒரு நர்சை கேட்டபோது அவர் பாதுகாப்பு கவலைகள், பெற்றோரின் அழுத்தம் ஆகியவற்றால்தான், தான் ஊருக்கு திரும்பி விட்டதாக தெரிவித்தார். “குடும்பமும், பெற்றோரும் தான் முக்கியம். எங்கள் மாநிலம் பசுமையான மாநிலம், மாநில அரசு எங்களுக்கு உதவுகிறது” என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தாவில் உள்ள பாகீரதி நியோட்டியா பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவரை கேட்டபோது அவர், “பல நர்சுகள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அளித்துள்ளனர். சிலர் வேலைக்கு வர மறுத்து விட்டனர். எனவே அவர்கள் ஊருக்கு போக போவது வெளிப்படையாக தெரிகிறது” என்று கூறினார்.

கொல்கத்தா தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் வேலைகளை விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதால் அந்த நகரம் பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நர்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page