நகர்ப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்தி: அரசியல், மத தலைவர்களை களம் இறக்க முடிவு

Spread the love

நகர்ப்புறங்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அரசியல், மத தலைவர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும் அதன் ஆதிக்கம், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில்தான் மிக அதிகமாக உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் மற்றும் மூத்த அதிகாரிகள் நேற்று முன்தினம் டெல்லியில் நடத்திய கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது. அந்த ஆவணத்தில் நமது நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் 30 நகர்ப்புற பகுதிகளில்தான் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த 30 நகர்ப்புறங்களில் மும்பை, புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், நாசிக், ஜோத்பூர், ஆக்ரா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், ஆமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், ஹவுரா, கர்னூல், போபால், அமிர்தசரஸ், வதோதரா, உதய்பூர், அவுரங்காபாத், ஐதராபாத், சூரத், பால்கார், பெர்ஹாம்பூர், சோலாப்பூர், மீரட் ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

இந்த நகரங்களில் குடியிருப்புகள் மோசமான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளன; பெரும்பாலும் நெரிசலானவை. ஏராளமான மக்கள் சிறிய இடங்களுக்குள் நெரிசலில் உள்ளனர். எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தலும், தனிமைப்படுத்துதலும் மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளதாக மத்திய அரசின் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நகர்ப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு புதிய உத்தியை கையில் எடுக்கிறது.

குறிப்பாக, இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பதிலடி கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கூடுதல் மனித வளத்தை பயன்படுத்த வேண்டும், குறிப்பாக உள்ளூர் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களை களம் இறக்கி பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஆவணத்தில் யோசனை கூறப்பட்டுள்ளது. இப்படி இவர்களை பயன்படுத்துகிறபோது நகர்ப்புற மக்கள் அவர்களையும், அவர்கள் சொல்வதையும் நம்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சி பெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு வீரர்களை பயன்படுத்த அதற்கான இணைய தளத்தை தொடர்பு கொள்ள முடியும். அவர்களையும் கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கலாம். அந்த குழுவுக்கு இன்சிடென்ட் கமாண்டர் (சம்பவ தளபதி) தலைமை ஏற்பார். சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தொண்டு அமைப்பினர் ஆகியோரை பிரதிநிதிகளாக கொள்ளலாம். சம்பவ தளபதி மாநகராட்சி, நகராட்சி கமிஷனருடன் தொடர்பு கொண்டு தேவையானதை செய்வார்.

நகர்ப்புற மக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கேபிள் டி.வி. சேவையினை பயன்படுத்தலாம். நகர்ப்புற மக்களை குறிவைப்பதற்கும், சமூகத்தில் பரவுகிற தவறான தகவல்களை மறுப்பதற்கும், சமூக ஊடகங்கள் பொருத்தமான செய்திகளுடன் பயன்படுத்தப்படவேண்டும். சமூக குழுக்கள் ஆரோக்ய சேது பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதையும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் ஆவணம் கூறுகிறது. பெரும்பாலான நகரங்களில் நோய் கண்காணிப்பு முறையாக இல்லை என்று அந்த ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 30 நகர்ப்புறங்களில் கண்காணிப்பு அமைப்பு பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page