கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – தனியார் நிறுவனத்துக்கு, பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடிதம்

Spread the love

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனத்துக்கு, பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் ஒப்பந்த முறையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலித்து வரும் ஸ்ரீமங்களம் ஏஜென்சிஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை பஸ் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 145 கார்களும், 1,359 இருசக்கர வாகனங்களும் பஸ் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. தற்போது வாகனங்களை திரும்ப எடுக்க செல்கிற பொதுமக்களிடம் இந்த வாகனங்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் நிறுத்தப்பட்டதற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதாக தெரியவருகிறது.

ஊரடங்கு காலத்தில் வாகனங்களின் இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அந்த சமயத்தில் வாகன நிறுத்தத்தில் இருந்து தங்களுடைய கார்களையோ, இருசக்கர வாகனங்களையோ அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்வது சாத்தியம் இல்லை. எனவே பஸ் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு ஒரு நாள் வாகன நிறுத்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் ஒரு நாளுக்கு உரிய கட்டணமான நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.40-ம், சைக்கிள்களுக்கு ரூ.15-ம் செலுத்தி நிறுத்தியிருந்த தங்களுடைய வாகனங்களை பொதுமக்கள் எடுத்து செல்லலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page