டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்

Spread the love

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறிகுளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளி நாடுகளிலிருந்து வந்த மத போதகர்கள் தெலுங்கானா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சென்று மசூதிகளில் பல கூட்டங்களை நடத்தி உள்ளனர்.

மலேசியா (20), ஆப்கானிஸ்தான் (1), மியான்மர் (33), அல்ஜீரியா (1) டிஜிபவுட்டி (1), கிரிகிஸ்தான் (28), இந்தோனேசியா (78), தாய்லாந்து (7), இலங்கை (34), வங்கதேசம் (19), இங்கிலாந்து (3), சிங்கப்பூர் (1), பிஜி (4), பிரான்ஸ் (1), குவைத் (1) ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்க ஊரடங்கு உத்தரவின் போது விசா விதிகளை மீறியதற்காக மத போதகர்களை தடுப்புப்பட்டியலில் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கேட்டதற்கு, குழு செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது ஷோப் அலி, சம்பந்தப்பட்ட மருத்துவமனை தங்களுக்கு இதுபோன்ற எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page