சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்ற கோரிக்கையை விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கும்படி மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உலகம் முழுவதையும் ‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் இந்த வைரசினால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில், இந்த வைரசை அழிக்கவும், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் உயிரை காப்பாற்றவும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் மருந்து உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்கு மனுக்களில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சமூக பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வைரசை குணப்படுத்த இதுவரை முழுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் இந்த கொரோனா வைரசை அழிக்க முடியும்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் காட்டமுடியும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால், சென்னை ஐகோர்ட்டும் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்குகள் ‘ஜூம் ஆப்’ என்ற செயலி மூலம் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் இந்த வழக்குகளை விசாரித்தனர்.
அரசு தரப்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “கொரோனா வைரசை அழிக்க சித்தா உள்ளிட்ட மருத்துவத்தில் வழிமுறைகள் உள்ளன என்று மனுதாரர்களின் கோரிக்கையை மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழு விரைவாக பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கவேண்டும். மேலும், கிருமிநாசினி, சோப், முக கவசம் ஆகியவற்றையும் தாராளமாக பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.