தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் எடப்பாடி பழனி சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவியிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த நோய் பரவி இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பேர் இந்த வைரஸ் நோயால் இறந்துவிட்டனர். இந்தியாவை பொறுத்தவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இறந்திருக்கிறார்.
இந்தியாவில் 1,139 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாக சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 17 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 29-ந் தேதி வரை 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது மேலும் கூடுதலாக 17 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து 67 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டு இருக்கிறது.
அவர்கள், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவுக்கென்று அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து 17 ஆயிரத்து 89 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது.
தனியாரையும் சேர்த்து இன்றைக்கு இருக்கும் வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கை 3,018. நோயாளிகளுக்கு சோதனை செய்வதற்காக அரசும், தனியாரும் சேர்ந்து 14 மையங்களில் ஆய்வக வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். விரைவில் மேலும் 3 ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
குணமானவர்கள்
இதுவரை விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 234. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்த நபர்களின் எண்ணிக்கை 3,420.
ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,981. வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை 43,537. தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் இதுவரை இருந்தவர்களின் எண்ணிக்கை 1,641.
கொரோனா நோய் என சந்தேகிக்கப்பட்டு உள்நோயாளியாக தனிப்பிரிவில் இருந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,925. கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாகி வீட்டிற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5.
1½ கோடி முக கவசங்கள்
அரசு ஒன்றரை கோடி முக கவசங்களை வெளியில் இருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. 25 லட்சம் ‘என்-95’ முக கவசம், 11 லட்சம் பாதுகாப்பு கவசம், 2,500 வெண்டிலேட்டர், 30 ஆயிரம் சோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
யார் வெளியூர் செல்லலாம்?
கேள்வி:- வெளியூர் செல்வதற்கு அனுமதி பெறுவதில் சிரமம் உள்ளதே?
பதில்:- ஒன்று, குடும்பத்தில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் துக்க காரியங்களுக்கு செல்லலாம். ஏற்கனவே திருமணம் ஏற்பாடு செய்திருந்து, திருமணம் நடந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும்.
இரண்டாவது, குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அனுமதி கொடுத்திருக்கிறோம். மற்ற எதற்கும் கிடையாது. எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
அந்தந்த மாவட்டத்தில் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் ஒத்துழைப்பு
கேள்வி:- காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடு எந்த அளவு கடைபிடிக்கப்படுகிறது?
பதில்:- இந்த நோய்க்கு மருந்தே தனிமைதான். இப்போது 2-வது நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையிலேயே இந்த நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்திவிட்டால், நமக்கு எந்த பிரச்சினையும் எழாது. எவ்வளவு தான் சட்டங்கள் போட்டாலும், மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடுமையான சட்டம் என்பது மக்களை துன்புறுத்துவதற்கு அல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத்தான். சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டம்
கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளாரே?
பதில்:- எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்துவதற்கு இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும், நோய் தொற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இது எல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். இதில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கோ, அரசியல் செய்வதற்கோ அவசியமில்லை.
சென்னையில் 20 முகாம்கள் இருக்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து இங்கே தங்கி இருப்பவர்களுக்கு, உணவு, மருந்து வசதிகளை செய்து கொடுக்கிறோம். மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
17 பேருக்கு எப்படி வந்தது?
கேள்வி:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 17 அதிகரித்ததற்கு என்ன காரணம்?
பதில்:- டெல்லிக்கு 1,500 பேர் குழுவாக சென்று இருக்கிறார்கள். அந்த குழுவில் சென்றவர்களுக்குத்தான் இந்த தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரோட்டில் 24 பேருக்கு இருக்கிறது.
அதேபோல, இந்த குழுவில் சென்ற 1,500 பேரில் 981 பேர் வந்துவிட்டார்கள். அந்த 981 பேரையும் பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த குழுவில் இடம் பெற்று சென்றவர்களால்தான் இவ்வளவு தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.