புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல், தற்போது வரை, ஏழைப் பெண்களுக்கு, 6.80 கோடி, ‘காஸ் சிலிண்டர்’கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, கடந்த மார்ச்சில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள், எட்டு கோடி பேருக்கு, மூன்று மாதங்களுக்கு, மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் முதல் தற்போது வரை, பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழை பெண்களுக்கு, 6.80 கோடி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலவச காஸ் சிலிண்டர்களுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முன்னதாகவே வரவு வைக்கப்படுகிறது. இதனால், அத்தொகை மூலம், அவர்கள், அருகில் உள்ள எரிவாயு முகவர்களிடம், காஸ் சிலிண்டரை பெற்று வருவதாக, அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.