புதுடில்லி: மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகர் பிரகாஷ் ஜாவடேகர், 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, இன்று(மே 22) நாட்டு மக்களிடம் பேசுகிறார்.
நாட்டில் வானொலி ஒலிபரப்பில், அகில இந்திய வானொலி நிலையங்கள், எப்.எம்., எனப்படும் தனியார் வானொலி நிலையங்கள், சமூக வானொலி நிலையங்கள் என, மூன்று பிரிவுகள் உள்ளன. சமூக வானொலி நிலையங்கள், உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படுகின்றன. நாட்டில், 290 சமூக வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 130, கல்வி நிறுவனங்கள் சார்பிலும், 143 தொண்டு நிறுவனங்களாலும், 17 விவசாய அறிவியல் மையங்களாலும் நடத்தப்படுகின்றன.
சமூக வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை, ஒன்பது கோடிக்கும் அதிகமான மக்கள் கேட்கின்றனர். இவற்றில், உள்ளூர் மொழிகளிலேயே, நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. இந்நிலையில், மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமூக வானொலி நிலையங்கள் வழியாக, இன்று நாட்டு மக்களிடம் பேசுகிறார்.
கொரோனா பரவல் காலத்தில், சமூக வானொலி நிலையங்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும், வைரஸ் பரவல் தடுப்பு பற்றியும் அவர் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், அமைச்சர் பேசுகிறார். மற்ற மாநில நிலையங்கள், அமைச்சரின் பேச்சை, உள்ளூர் மொழியில் ஒலிபரப்புகின்றன.