வாழ்க்கை படகை செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை, நடுத்தரவாசிகள் பணப்புழக்கம் இல்லாததால் திணறல்

Spread the love

சத்தமின்றி அதிகரிக்கும் விலைவாசியால் வாழ்க்கை படகை செலுத்த முடியாமல் ஏழை, நடுத்தரவாசிகள் தவித்து வருகிறார்கள்.

சென்னை,

கொரோனா….பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று சொல்லும் அளவுக்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக மக்களை மிரட்டி வருகிறது. கண்ணுக்கு தெரிந்த எதிரியை கூட சமாளித்து விடலாம். ஆனால் இந்த கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்கொண்டு வருவதில் தான் எத்தனை சவால்கள், பிரச்சினைகள். புலி பதுங்குவது பாயத்தான் என்பது போல நம் வீட்டிற்குள்ளே நம்மை நாம் தனிமைபடுத்தி கொண்டு இருக்கிறோம்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 50 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய, சிறிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் மக்களின் வாழ்வாதார பிரச்சினை தற்போது தலை தூக்க தொடங்கி உள்ளது.

இந்த காலகட்டத்தில் மக்கள் தங்கள் சேமிப்பில் வைத்திருந்த சிறிய தொகையும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, இப்போது பரிதாபத்துக்குரிய நிலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஊரடங்கு முழுமையாக விளக்கி கொள்ளப்படாத நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியாது நிலையில் அவர்கள் இருந்து வருகிறார்கள்.

காரணம் விலைவாசி உயர்வு. ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு அதிகரித்துவிட்டது. காய்கறி விலைகள், இறைச்சி விலை வரலாறு காணாத ஏற்றத்தை கண்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது.

உதாரணத்துக்கு ஒரு தேயிலை பாக்கெட்டின் அதிகபட்ச விலை (எம்.ஆர்.பி.) ரூ.58 என்றால் அதை கடைகளில் ரூ.65-க்கு விற்கிறார்கள். கேட்டால் எங்களுக்கு இந்த விலைக்குத்தான் மொத்த விற்பனை கடைகளில் தருகிறார்கள், எங்குமே ஸ்டாக் இல்லை, பொருட்கள் கிடைத்தாலும் கூடுதல் கட்டணத்தில் வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு வரவேண்டி உள்ளது என்று காரணங்களை வாடிக்கையாளர்களிடம் அடுக்குகிறார்கள்.

தொழில் ஆதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொழில் ஆதாரத்தை மேம்படுத்திக்கொள்ள ஆயத்தம் ஆவதற்கு முன், ஊரடங்கு காலக்கட்டத்தால் கையிருப்பு கரைந்து, விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பணம் இன்றி தவித்து வரும் நிலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனைக்குரிய ஒன்று.

அந்தவகையில் மீண்டும் முதலில் இருந்து தொழிலை ஆரம்பிக்கும் பொதுமக்களுக்கு பேரிடியாக தான் விலைவாசி அமைந்துள்ளது. ஒருபக்கம் வாழ்வாதாரம் மற்றொரு பக்கம் பசி இந்த இரண்டுக்கும் நடுவில் வாழ்க்கை சக்கரத்தை அவர்கள் நகர்த்த வேண்டிய முக்கிய காலகட்டத்தில் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கிடையே ஜூன் மாதத்தில் கல்வி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கல்வி நிறுவனங்களும் ஒருபக்கம் அவர்களை அச்சுறுத்தி வருகிறது,

மூன்று மாதங்களுக்கு கடன் மாத தவணைகள் வசூலிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டாலும் பல வங்கிகள் கடனை வசூல் செய்து தான் வருகிறது. அதேபோல் கிராமங்களில் வார வட்டி என்று சொல்லப்படும் தனியார் நிதி நிறுவன வட்டி நிறுவனங்களும் கடன்களை வசூல் செய்து தான் தருகிறார்கள். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று பழமொழி சொல்வார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் பணம் இருந்தால் தானே கொடுக்க முடியும்.

எனவே சத்தமின்றி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொல்லியாக விழுங்கும் விலைவாசியில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page