அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் 5-ம் ஆண்டு தொடக்க நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Spread the love

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா காட்டிய பாதையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியே தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக 5-ம் ஆண்டு தொடக்க நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் இதயத்தில் என்றும் வாழும் பாசமிகு தாய் ஜெயலலிதா தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின், 4-ம் ஆண்டு நிறைவுற்று 23-ந்தேதி (இன்று) 5-ம் ஆண்டு தொடங்குகிறது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனையைப் போல, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் அரசாக, 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தன்னந்தனியாக களம் கண்டு, தொடர் வெற்றி மூலம் மீண்டும் அ.தி.மு.க. அரசை அமைத்த மகத்தான சாதனையாளர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றும், ஆயிரம் தலைமுறை செழிக்க வந்த பேரியக்கம் அ.தி.மு.க. என்பதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சூளுரையாகவும், தீர்க்கத் தரிசனமாகவும் ஜெயலலிதா முழங்கியது நம் செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றரை கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க. அரசையும் ஜெயலலிதாவின் பூரண நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம். ஜெயலலிதாவின் வழியில் நாம் செயல்படுகிறோம்.

அதன் விளைவாக, மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம். ரூ.11,250 கோடியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டம். முதல்-அமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூலம் ரூ.8,835 கோடிக்கான முதலீடுகள் ஈர்ப்பு. அ.தி.மு.க. அரசால் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் முயற்சியில், தமிழ்நாட்டில் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்னும் பட்டியலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன. நாம் செய்திட்ட பணிகள் ஏராளம். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதிலும், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஜெயலலிதாவின் வழியிலேயே திறம்பட செயலாற்றும் என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு மக்கள் அ.தி.மு.க. அரசை தங்களின் நலன் காக்கும் அரசாக போற்றுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நடைபெறும் அ.தி.மு.க. அரசே தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்திட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நம் இருபெரும் தலைவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றி, கட்சிக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் புகழ் சேர்ப்போம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் போல தொடர் வெற்றி பெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம். நேற்றும், இன்றும், நாளையும் அ.தி.மு.க. அரசே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்திட அயராது உழைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page