புதுடில்லி : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உணவக துறைக்கு ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், தேசிய உணவகங்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவால், உணவகங்கள் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுடன், சங்க பிரதிநிதிகள், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசினர். அப்போது, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உணவக துறைக்கு, உடனடியாக சிறப்பு சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் வசதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது
சலுகைகள் கிடைக்காமல் போனால், மேலும் ஏராளமானோர் வேலையிழக்க நேரிடும் என, தெரிவிக்கப்பட்டது. குறைந்த ஊதியம் வாங்கும் உணவக தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் காப்பீட்டு நிதியம் மூலம், ஊதியம் வழங்கலாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்துடன், உணவக துறைக்கு, ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரிச் சலுகை வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். கொரோனாவால் உணவகத் துறை சந்தித்துள்ள முக்கிய பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு காண்பதாகவும், பின், இத்துறைக்கு நீண்ட கால கொள்கை திட்டத்தை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும், நிதியமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.