பெங்களூரு:
இந்தியாவையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் கர்நாடக மாநிலத்திலும் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 1,959 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 608 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கர்நாடகாவில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கில் கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்படிருந்தன. மேலும் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு, வாகனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்படிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக வைரஸ் பரவு வேகம் அதிகரித்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.