நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நிதி அயோக் உறுப்பினரும், கொரோனா கட்டுப்பாட்டு குழு தலைவருமான டாக்டர் வி.கே. பால் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா பரவிய சமயத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் எந்த ஆஸ்பத்திரியும் இல்லை.
ஆனால், நாம் இப்போது விரிவான வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். கொரோனா நோயாளிகளுக்கு என்று பிரத்தியேகமாக சிகிச்சை அளிப்பதற்கு 1093 ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் 2 ஆயிரத்து 402 சுகாதார மையங்கள், 7 ஆயிரத்து 13 கொரோனா நோயாளிகள் கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆஸ்பத்திரிகளில் நேரடியாக சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 85 ஆயிரத்து 306 படுக்கைகள் இருக்கின்றன. அவற்றில் 31 ஆயிரத்து 250 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றன.
கொரோனா நோயாளி கவனிப்பு மையங்களில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் இருக்கின்றன. மொத்தத்தில் அனைத்து பிரிவுகளிம் சேர்த்து 9 லட்சத்து 74 ஆயிரம் படுக்கைகள் இருக்கின்றன.
ஒரே நேரத்தில் இத்தனை எண்ணிக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
கொரோனா நோயாளிகளில் சுமார் 5 சதவீதம் பேருக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. 80 சதவீதம் பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிகிச்சை போதுமானதாக உள்ளது.
தற்போது நோயாளிகள் குணமாகுதல் விகிதம் 41 சதவீதமாக இருக்கிறது.
நாட்டில் இதுவரை 28 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் 11 நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில்தான் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. அதாவது ஒட்டு மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் இந்த 11 நகராட்சி, மாநகராட்சியில் உள்ளனர். இவை மராட்டியம், தமிழ் நாடு, குஜராத், டெல்லி, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் அமைந்துள்ளன.
இந்த 11 நகரத்தை சேர்ந்த முனிசிபல் கமிஷனர்கள், நகர மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தினார்கள்.
அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பரிசோதனைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.