சென்னை:
விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோக வாய்ப்புள்ளதாக கருதி என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயப் பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும், இலவச விவசாய மின் இணைப்பு தரும்போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது: மின் மீட்டர் பொருத்தப்படுவதை கண்டு விவசாயிகள் அச்சம் அடைந்ததால் முதல்வரின் உத்தரவின் பேரில் விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நிறுத்தப்படுகிறது. மின்மோட்டாரின் குதிரை திறனை அதிகரிக்க மட்டுமே வைப்பு தொகையை கூடுதலாக செலுத்தலாம். இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம். தட்கல் திட்டத்தில் மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அதையும் வேண்டாம் என முதல்வர் கூறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.