பொதுப்பணித்துறை கட்டுமானங்கள்: தமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் ஜூன் முதல் வாரத்தில் வருகிறார்கள்

Spread the love

பொதுப்பணித்துறை கட்டுமானங்கள்: தமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் ஜூன் முதல் வாரத்தில் வருகிறார்கள்

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நடந்து வரும் கட்டிடப்பணிகளில் ஈடுபட்டு ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் வருகிற ஜூன் முதல் வாரத்தில் தமிழகம் வந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழக பொதுப்பணித்துறையின் கட்டிடப்பிரிவு சார்பில் அரசு மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், விடுதிகள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைத்தல், சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள ஹூமாயுன் மகால் சீரமைப்பு, ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், நீதிமன்ற கட்டிடங்களை கட்டி வருகிறது.

இந்த கட்டுமானப்பணிகளில் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 90 சதவீத பணியாளர்களும், 10 சதவீதம் தமிழக பணியாளர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுதவிர தமிழகத்தில் வேறு பல தொழில்களிலும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் இறுதி வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் கட்டுமானத்தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்களும் முடங்கின.

கட்டுமானத்தொழிலாளர்களும் வேலைகளை இழந்து தவித்தனர். இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் ரெயில் போக்குவரத்தும் தடைப்பட்டதால் அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுப்பணித்துறை கட்டுமானங்களில் பணிகள் நடக்காத நிலையிலும், வெளிமாநில பணியாளர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு போன்றவை அளிக்கப்பட்டதுடன், செலவுகளுக்காக தினசரி ரூ.200 வீதம் 2 மாதங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்தநிலையில் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.5 அல்லது ரூ.6 ஆயிரம் வரை சேமித்ததும் உடனடியாக சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்களில் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அவ்வாறு சென்றதில் பொதுப்பணித்துறையில் மட்டும் 50 சதவீதம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மீதம் உள்ள 40 சதவீத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் இணைந்து தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்ற நிலையில் தற்போது அவர்களிடம் இருந்து பணம் முற்றிலும் கரைந்த நிலையில், மீண்டும் தமிழகத்திற்கு வந்து பணியாற்றி சம்பாதிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் கூறுகையில், ‘வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் வந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அதுவும் வருகிற ஜூன் முதல் வாரத்தில் ஊரடங்கு நிறைவுக்கு வந்து ரெயில்கள் ஓட தொடங்கினால் மீண்டும் பணிக்கு வருகிறோம், எனவே ‘ஊரடங்கை நிறைவு செய்து ரெயில்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஓடுவதற்காக அரசிடம் ஒப்பந்தக்காரர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்றும் வெளிமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொதுப்பணித்துறையின் கட்டுமானங்களில் தற்போது 50 சதவீதம் அளவில் நடந்து வருகிறது. இதுவே வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து நூறு சதவீதம் அளவிற்கு பணிகள் நடக்கும். எனவே திட்டமிட்ட காலத்தில் பணியை முடிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page