சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு 7 செவிலியர் உள்பட 19 பேருக்கும் தொற்று

Spread the love

சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை,

சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைப்போல் அங்கு 7 செவிலியர் உள்பட 19 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கக்கூடியவர்களாக குழந்தைகள், ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என கருதப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 100 கர்ப்பிணிகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

சென்னையில் கர்ப்பிணி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும், ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணி பெண்களும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 கர்ப்பிணி பெண்கள் என, 204 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் நடந்துள்ளது. அந்த பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் தொற்று ஏற்படாத வகையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் 4 டாக்டர்கள், 7 செவிலியர்கள் மற்றும் 8 மருத்துவ பணியாளர்கள் என 19 மருத்துவமனை ஊழியர்களுக்கும் இதுவரை கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே சாதாரண ‘வார்டில்’ அனுமதிக்கப்படுவதே நோய் தொற்று பரவுவதற்கான காரணம் என செவிலியர்கள் தெரிவித்தனர். இதைப்போல் மேலும் மருத்துவ ஊழியர்கள் பாதிக்காமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைப்போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா ‘வார்டில்’ பணியாற்றும் செவிலியர்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு 7-வது மாடியில் தங்கியிருந்த 15 செவிலியர்கள் உள்பட 23 நர்சுகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பணியாற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடும்பத்தினர் 4 பேரும், மற்றொரு செவிலியரின் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதய நோய் பிரிவில் பணியாற்றிய 6 மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page