புதுடில்லி:
வங்கிகள் இணைப்பிற்கு பின், அனைத்து ஊழியர்களுக்கும் நலத்திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டதால், வங்கி பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து ஏப்.,1 முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வந்தது. இதன் மூலம் 2017ல் 27 ஆக இருந்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை இப்போது 12 ஆக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ., வங்கிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வங்கியாகவும், கனரா பேங்க் நான்காவது பெரிய வங்கியாகவும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐந்தாவது பெரிய வங்கியாகவும் மாறியுள்ளன. வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், 10 பொதுத்துறை வங்கிகளும் தகவல் தொழில்நுட்ப ரீதியில் 4 மிகப்பெரிய வங்கிகளாக ஒருங்கிணைப்படவில்லை என்றாலும், தற்போது வரை வங்கி பணிகள் சீராக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் அதன் சொந்த ஊழியர் நலன் திட்டங்கள் இருந்தன. ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் ஒருங்கிணைந்த வங்கிகளில், அனைத்து ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. எனவே நெஞ்செரிச்சல் உருவாகவில்லை.
அடுத்தக்கட்டமாக, தனிப்பட்ட வங்கிகளின் கொள்கையை கணக்கில் கொண்டு, ஊழியர்களின் பணியிடமாற்றம் மற்றும் மற்ற கொள்கைகள் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். தற்போது வரை வங்கி கிளைகள் மூடப்படவில்லை. ஊரடங்கிற்கு பின், வங்கி கிளைகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் இருக்கும். எஸ்.பி.ஐ மற்றும் அதன் 5 துணை வங்கிகள் இணைப்பிற்கு பின் சீராக செயல்பட்டு வருகின்றன. அதை போன்ற மற்ற வங்கிகள் இணைப்பும் இருக்குமென எதிர்ப்பார்க்கிறோம்.
வங்கிகள் இணைப்பு என்பது நட்பின் அடிப்படையில் நடைபெற்றது. விரோதமான வழியில் இல்லை. வங்கிகள் மட்டத்தில், இணைப்பு வங்கிகளின் ஊழியர்களுக்கு ஒருசார்பு இருக்க கூடாது. கொள்கைகள் சரியாக இருக்க வேண்டும். இந்திய வங்கிகள் சங்கத்துடன் நிலுவையில் உள்ள ஊதிய பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, கொரோனா தொற்று நாட்டிற்கும் மக்களுக்கும் அவசரகால சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.