தமிழகத்துக்கு மேலும் 1½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனை மிகவும் அதிகமாக செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அதிக பரிசோதனை மூலம் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களும், ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை விரைவாக கண்டறிய இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் மூலம் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 68 ஆய்வகங்களில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரிசோதனை தொடர்ந்து செய்ய தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 11 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்களை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மேலும் 1½ லட்சம் பரிசோதனை உபகரணங்கள் சென்னை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, இதுவரை, 2½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் வந்துள்ளன. மேலும் வாரம் ஒரு லட்சம் உபகரணங்கள் என்ற அடிப்படையில் 8½ லட்சம் பரிசோதனை உபகரணங்கள் வர உள்ளன, என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.