துபாய்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு நாடுகள் இன்று முதல் (27 ம் தேதி) இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. ஐக்கிய அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டன. இங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,086 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 253 ஆகவும் உள்ளது. முன்னதாக யு.ஏ.இ.,யும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இதனிடையே இன்று (27 ம் தேதி) ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. அமீரகம் முழுவதும் வணிகக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து துபாய் இளவரசரும் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
பொது மக்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் சுதந்திரமாக நடமாடலாம்.
யு.ஏ.இ.க்கு திரும்பி வர விரும்புவோருக்கும் போக்குவரத்திற்காகவும் விமான நிலையங்கள் திறக்கப்படும். சில்லறை கடைகள் மற்றும் மொத்த விற்பனைகள் மீண்டும் திறக்கப்படும்.
இஎன்டி கிளினிக்குகள் , குழந்தைகள் சுகாதார மையம் மீண்டும் திறக்கப்படும். அறுவை சிகிச்சை மையங்கள் இரண்டரை மணி நேரம் இயங்கும்
பொழுது போக்கு மையங்கள் மீண்டும் திறக்கப்படும். அமீர், தாஷீல் போன்ற அனைத்து அரசு அலுவலகங்களும் திறக்கப்படும். இன்று முதல் இயக்கப்படும் மெட்ரோ பயன்பாடு ஞாயிற்றுகிழமை முதல் வியாழன் வரையில் காலை 7 மணிமுதல் நள்ளிரவு வரையிலும் , வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இயங்கும். மேலும் பொது போக்குவரத்து நேரங்களும் மாற்றப்பட்டு உள்ளன. இரவு 11மணி முதல் காலை 6 மணி வரை அத்தியாவசிய பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இண்ட்ராசிட்டி பஸ்கள் காலை 6 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும். அனைத்து லிப்டுகளிலும் தேவையான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முடி திருத்தும் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.