டிரம்பின் அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வாஷிங்டன்
உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 42,130 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,57 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1,77 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். கிட்டதட்ட 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 4,076 ஐ எட்டியுள்ளது, இது சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரு மடங்காகும். சனிக்கிழமை இறந்தவர்களின் எண்ணிக்கை 2,010 ஆக இருந்தது.
வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் கூறப்படுகிற நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்கா, கொரோனா முன்னால் கதிகலங்கி நிற்கிறது. உண்மையில், ஜனாதிபதி டிரம்ப் அரசின் தவறான முடிவுகள்தான் இந்த நிலைக்குக் காரணம். ஆரம்பம் முதலே அலட்சியம்.
கொரோனா பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப, அமெரிக்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டார்கள். இத்தனைக்கும், கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே டிரம்ப் அரசுக்கு அமெரிக்க உளவுத்துறை அளித்துவிட்டது.ஆனால், “நிலைமை முற்றிலுமாகக் கட்டுக்குள் இருக்கிறது. சீனாவிலிருந்து வந்த ஒருவருக்குத்தான் கொரோனா இருக்கிறது. மற்றபடி எல்லாம் நலமே” என்கிற ரீதியில் பேசிவந்தார் டிரம்ப்.
கொரோனா பாதிப்பால் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், மருத்துவமனைகளில் சுவாச கருவிகள் அவசியம்.ஆனால், மார்ச் 15 நிலவரப்படி, கையிருப்பில் வெறும் 12,700 சுவாச கருவிகள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். ஆனால், நம்மிடம் போதுமான வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று துணை அதிபர் மைக் பென்ஸ் சமாதானம் சொன்னார்.
எனினும், எத்தனை சுவாச கருவிகள் இருக்கின்றன என்று அவர் சொல்லவே இல்லை. தவிர, சுவாச கருவிகளை விநியோகிக்கும் விஷயத்தில் பல மாநிலங்களின் ஆளுநர்களுடன் மோதல் போக்கை ஜனாதிபதி டிரம்ப் கடைப்பிடித்தார்.பல மருத்துவமனைகளில் சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக, அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், “நம்மிடம் விரைவில் மருத்துவ உபகரணங்கள் உபரியாகவே இருக்கும்.அவற்றை இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அனுப்ப முடியும்” என்று பேசிக்கொண்டிருந்தார் டிரம்ப்.
இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா எட்டிப்பார்த்த ஆரம்பக் கட்டத்தில், சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை டன் கணக்கில் சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்திருக்கும் விஷயம் வெளியாகியிருக்கிறது.
இப்படிப் பொறுப்பில்லாமல் டிரம்ப் அரசு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் நிலைகுலைய வைத்திருக்கிறது.மார்ச் 28 கணக்கின்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
பலி எண்ணிக்கையில், உலகிலேயே ஆறாவது இடம் அந்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. மார்ச் 31-ல், அமெரிக்காவில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்தை கடந்தது. 2001 செப்டம்பர் 11-ல் உலக வர்த்தக மையக் கட்டிடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட இது அதிகம். இன்றைய தேதிக்கு 1.60 லட்சம் அமெரிக்கர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பரவலைக் கவனிக்க என்றே அரசால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயலாற்றினாலும்கூட, கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரித்திருப்பது அமெரிக்கர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
‘நான் ஒரு நேர்மறையான நபர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். ‘
கொரோனா வைரஸின் தாக்கம் வலுவாக உள்ளது. அமெரிக்காவில் 1,75,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் வலி நிறைந்தது.
ஏப்ரல் 30-ம் தேதி வரை அமெரிக்காவில் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்