புதுடில்லி:
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கான தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛தற்போதைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி, கொரோனா நோயாளிகளிடம் பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் வர்த்தக ரீதியாக நோயாளிகள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அரசின் நிலத்தை சலுகை விலையில் பெற்ற மருத்துவமனைகள், அறக்கட்டளைகளின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும், என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ‛அரசிடம் இருந்து இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ நில ஒதுக்கீடு பெற்ற அறக்கட்டளை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இத்தகைய தனியார் மருத்துவமனைகளை மத்திய அரசு அடையாளம் காண வேண்டும்,’ என அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
‛இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டிய தேவையுள்ளது,’ எனக் குறிப்பிட்ட துஷார் மேத்தா, இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.