வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா பரவல் துவங்கிய நான்கு மாதங்களுக்குள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் முதல் கொரோனா பாதிப்பு, வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதியில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17.3 லட்சத்தை எட்டவுள்ளது. உலகின் வேறு எந்த நாட்டையும்விட அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுவரை, 1.02 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3.72 லட்சம் பேர் மட்டுமே வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் மட்டும், 30 சதவீதம் பேர் உள்ளனர். ‘ஊரடங்கு உத்தரவை மிகத் தாமதமாகப் பிறப்பித்ததே, இவ்வளவு பாதிப்புகளுக்குக் காரணம்’ என, பல்வேறு தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றம்சுமத்தி வருகின்றனர். இந்த குற்றசாட்டுகள் குறித்து கவலைப்படாமல், பிற நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவதிலும், வல்லுநர்களின் கருத்துக்களை ஏற்காமல் அவர்களை விமர்சிப்பதுமாக இருக்கும் டிரம்ப், அங்கு ஊரடங்கைத் தளர்த்தவும் முடிவு செய்திருக்கிறார். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.