சென்னை:
ஊரடங்கு தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., நாளை (மே 29), ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும், சென்னை உள்ளிட்ட, சில மாவட்டங்களில், நோய் பரவல் குறையவில்லை.இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மருத்துவ குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என, மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. நாளை காலை, 10:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், சென்னை மாநகராட்சி கமிஷனரும் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா பரவல் நிலை குறித்து, முதல்வர் ஆய்வு செய்வதுடன், ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.