மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கு: எட்டு பேருக்கு ஜாமீன்

Spread the love

சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கில் எட்டு பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை,

சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனா பாதித்து கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மருத்துவரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்சு மீதும், அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் அவர்கள் காயமடைந்தனர். இதன்பின்பு அந்த பகுதியில் இருந்து மருத்துவரின் உடலை வேறிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் எட்டு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சாட்சிகளை கலைக்க கூடாது, அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page