அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

Spread the love

அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், கடந்த 4ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் பெரிதாக வெப்பம் வாட்டவில்லை. கரூர், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டவில்லை. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு அதிர்சியளித்தது அம்பன் புயல். இந்த புயல் தெற்கு வங்க கடலில் உருவாகி மேற்கு வங்கத்தில் 20ஆம் தேதி கரையைக் கடந்தது.

அம்பன் புயல் காற்றில் இருந்த ஈரப்பதத்தை எடுத்து சென்றதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெயில் வாட்ட தொடங்கியது. 22ம் தேதி அதிகபட்சமாக 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. அன்றைய தினம் சென்னையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அனல் காற்று வீச தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களும் சென்னையில் 100 டிகிரியை தாண்டியது வெப்பநிலை.

22ஆம் தேதி திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட், 23ஆம் தேதி 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெயில் அளவு இதுவாகும்.

சென்னையின் மீனம்பாக்கத்தில், அதிகபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை, சேலம், திருச்சி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் வறுத்தெடுத்தது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வ கோட்டை, கோமாபுரம், வளவம்பட்டி,ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

மதுரை கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல்புதூர், தெப்பக்குளம் பகுதிகளிலும், நெல்லையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page