கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்

Spread the love

கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, கடந்த 1-ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 27-ந் தேதி, சிறப்பு ரெயில்களில் பயணம் செய்த போதே 9 பேர் இறந்து விட்டனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கொண்டு உயிர்ப்பலியை தவிர்ப்பதற்காக, நோய்வாய்ப்பட்டவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்குமாறு ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு ரெயில்களில் பயணம் செய்பவர்களில் சிலர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் சிலர் பயணத்தின்போது உயிரிழந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய-ரத்தக்குழாய் பிரச்சினைகள், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஆகியோரும் அத்தியாவசியமற்ற ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

பயண தேவையுள்ள அனைத்து குடிமக்களுக்கும் ரெயில்வே சேவைகளை உறுதி செய்ய 24 மணி நேரமும் ரெயில்வே பணியாற்றி வருகிறது. அதே சமயத்தில், பயணிகளின் பாதுகாப்பு முக்கியம். எனவே, அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

ஏதேனும் பிரச்சினை அல்லது அவசர உதவி தேவைப்பட்டால், 139 அல்லது 138 ஆகிய எண்களில் ரெயில்வேயை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page