அதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் மாநிலங்களவை செயலக அதிகாரி ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று டெல்லியில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயர் அதிகாரிகளும்கூட தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தின் அதிகாரி ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவருடன் சேர்த்து இதுவரை 4 பேர் நாடாளுமன்றத்தில் கொரோனாக்கு ஆளாகியுள்ளனர்.
இங்கு முதன்முதலில் தொற்றால் பாதிக்கப்பட்டது நாடாளுமன்ற துப்புரவு பணியாளர் ஆவார். கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில் இருந்து அவர் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரைத் தொடர்ந்து செயலக அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பு அதிகாரி ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனாவுக்கு ஆளான அதிகாரி, இயக்குனர் நிலையிலான அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் 2 தளங்கள் சீல் வைக்கப்பட்டன.
முழு ஊரடங்கு இடையே கடந்த மே மாதம் 3- ந் தேதி நாடாளுமன்ற செயலகப் பணிகள் தொடங்கின. அப்போது அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. தற்போது சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களை தவிர பிற கட்டிடங்கள் அலுவலக பணிக்காக திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால் வளாகத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் கொரோனா பரவியதற்கு, நாடாளுமன்றத்தின் அருகிலுள்ள கிருஷி பவன், சாஸ்திரிபவன் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்கனவே தொற்று பரவியதே காரணம் என்று கூறப்படுகிறது.