குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஹரிவரதன் நகரில் ரூ. 10 லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அதில் அ.தி.மு.க.வை சேர்ந்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலமுருகன், பானுப்பிரியா, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா, அவரது கணவர் காங்கிரஸ் பிரமுகரான புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த புஷ்பலதா, அவரது கணவர் வேலுச்சாமி, சின்னத்தாய் ஆகியோர் அங்கு வந்து வட்டார வளர்ச்சி அதிகாரியின் கார் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “கடந்த ஒரு மாதமாக எங்களுக்கு குடிநீர் வரவில்லை. ஊராட்சி தலைவர் எங்களது வீட்டின் குடிநீர் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர். அதற்கு புண்ணியமூர்த்தி “நீங்கள் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளர்கள். அதனால்தான் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது” என்றார். இதை அறிந்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்ற தலைவர் ஷீலாவிடம், எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஷீலாவின் கணவர் புண்ணியமூர்த்தி “எங்கள் பகுதி பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்தலாம்“ எனக்கூறி எம்.எல்.ஏ. விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இருதரப்பு ஆதரவாளர்களும் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது கைகலப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் புஷ்பலதாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.